பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று, "ஹிந்துக்களின் எழுச்சி நாள்" என்று இந்தியாவின் மிக மோசமான கலவரத்தை ஆதரித்து பகிரங்கமாக பதிவு செய்த எச்.ராஜா, திருமாவளவனுக்கு எச்சரிக்கை விடும் அளவு தமிழகத்தின் நிலை மோசமாகியுள்ளது.
ஹிந்துத்துவத்தின் மீதான தமிழக தலைவர்களின் விமர்சனக்குறைபாடு காரணமாகவே, எந்த வித முகாந்திரமும் இல்லாத இந்த சின்ன விவகாரத்திற்கு பாஜவினரும், ஹிந்து மத வெறியர்களும் கொதிக்கிறார்கள்.
திருமா பேசியது "அயோத்தியில் ராமர் கோவில் இருந்த காரணத்தினால், பாபர் மசூதியை இடிப்பது நியாயமென்றால், புத்த விஹார்களையும், சமண கோவில்களும் அழிக்கப்பட்டு ஹிந்து கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது, அதே தர்க்கப்படி மீண்டும் அங்கே புத்த கோவில்களை கட்டலாமா?" என்கிற வரலாற்று தர்க்கத்தை ஒப்பீட்டளவில் முன் வைத்தார்.
ஹிந்து வெறியர்களுக்கு திராணி இருந்தால், "புத்த விஹார்களையும், சமண கோவிலும் மறைத்து ஹிந்து கோவில்கள் கட்டப்படவில்லை" என்று, ஒரே மேடையில் விவாதிக்க அழைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்ய வாய்ப்பில்லை, அப்படி செய்தால் உண்மை வெளிப்படும். மாறாக "ஹிந்து கோவில்களை திருமா இடிக்க வேண்டும் என்கிறார்" என்று ஒற்றை வரியில் சாதகமாய் சுருக்கியிருக்கிறார்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பகுத்தறிவு இயக்கங்கள், சர்ச்சுக்கு எதிரான முழக்கங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும், அதன் காரணம்; மத அடிப்படைவாதத்தை விமர்சிக்காமல் விட்டு விட்டால், மத வெறியர்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்து விடுமென்கிற கவனம்.
"ராமர் எந்த காலேஜில் இன்ஜினியரிங் படிச்சார்?" போன்ற கலைஞர் ஸ்டேட்மெண்டுகளை இனி எந்த அரசியல் வாதியும் சொல்வதற்கு இங்கே சாத்தியமில்லையென்றே நினைக்கிறன்.
"மத நம்பிக்கைகளை புண்படுத்தக்கூடாது, அதுவே அமைதியான சமூகத்தை உருவாக்கும்" போன்றதொரு அயோக்கியத்தனமான ஒப்பந்தத்தோடு இந்த சமூகம் இருக்குமேயானால், அதை விட ஆபத்தான நிலை ஒரு நாட்டுக்கு இருக்க முடியாது. வரலாற்றில் பல விமர்சனங்களை முன் வைத்து தான், மதங்கள் சீர்திருத்த பட்டிருக்கிறது. நூறு வருடத்திற்கு முன்னான ஹிந்து மதத்திற்கும், தற்கால ஹிந்து மத நம்பிக்கைகளுக்கும் நூறு வித்தியாசம் இருக்கிறது, எல்லாமே சீராய்வு உட்பட்டு தான் இருந்திருக்கிறது.
முற்போக்கு இயக்கங்களின் இந்த தொடர் மௌனம் தொடர்ந்தால், மதவெறியர்களின் கூடாரமாகி விடும் இந்த நாடு என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.
வாடிகன் பாதிரியார்களின் பாலியல் குற்றங்களை படமாக்கி, ஆஸ்கர் பெறுகிறது ஹாலிவுட். சங்கராச்சாரியார், சங்கரராமன் என்கிற வார்த்தையை வைத்து ஒரே ஒரு காட்சி எடுத்து விடுங்கள் பார்ப்போம்? முடியவே முடியாது, அத்தனை மோசமான ஒரு சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் தான் சொல்ல முடியும்.
விமர்சனத்தை தாங்காத மதம், மனித குலத்தின் பேராபத்து, அது எந்த மதமானாலும்!
Comments
Post a Comment